search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரகா‌ஷ் ஜவடேகர்"

    ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார்?’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. #BJP #PMModi #PrakashJavadekar
    புனே:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மம்தா பானர்ஜி ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொல்கத்தாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேச கருத்துக்களை வெளியிட்டனர்.

    இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பிரகா‌ஷ் ஜவடேகர், மராட்டிய மாநிலம் புனேயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொல்கத்தாவில் நேற்று (நேற்று முன்தினம்) எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன. இந்த கட்சிகள் அனைத்தும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புவது நிரூபணமாகி உள்ளது. சரி. அப்படியென்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்?

    அவர்களால் (எதிர்க்கட்சிகளால்) மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது. எனவே நாட்டின் நிலைமை, மோடி இல்லை என்றால் அராஜகம்தான் இருக்கும்.

    கடந்த காலத்தில் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், தேவேகவுடா தலைமையிலான கூட்டணி அரசுகளை பார்த்திருக்கிறோம். அந்த பலவீனமான அரசுகளால் மக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    மற்றொரு பக்கம், பலம் வாய்ந்ததும், கொள்கைகளின் அடிப்படையிலானதுமான மோடி தலைமையிலான அரசினால் பல நன்மைகளை மக்கள் பார்த்து விட்டார்கள். எனவே வரக்கூடிய தேர்தலில், பலம் வாய்ந்த ஒரு அரசு வேண்டுமா அல்லது பலவீனமான அரசு வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.



    கொல்கத்தா பொதுக்கூட்டம், எதிர்க்கட்சிகளின் பதற்றத்தை காட்டியது. அவர்களால் தேர்தல் அறிக்கையையோ அல்லது குறைந்தபட்ச செயல்திட்டத்தையோ தயாரிக்க ஒரு குழுவைக்கூட அமைக்க முடியவில்லை.

    ஆனால் மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பான ஒரு குழுவை மட்டும் அமைத்துள்ளனர். இது, வரும் தேர்தலில் அடையப்போகிற தோல்விக்கு காரணம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அவர்கள் கருதுவதாக தோன்றுகிறது. இதில் அவர்களின் பதற்றமும் தெரிகிறது.

    காங்கிரசும், பிற எதிர்க்கட்சிகளும் ஒரு பலவீனமான அரசையே விரும்புகின்றனர். அப்போதுதானே அவர்கள் ஊழல் செய்ய முடியும்? ஆனால் மக்களோ நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கிற, ஊழலில் தொடர்புடைய யாரையும் விட்டு விடாத மோடி அரசைப் போன்ற பலம் வாய்ந்த அரசைத்தான் விரும்புகிறார்கள்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்றதை விட கூடுதல் இடங்களை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றும். ஓட்டு விகிதாசாரமும் அதிகரிக்கும்.

    கடந்த தேர்தலில் பெற்ற 282 இடங்களை பாரதீய ஜனதா கட்சி தாண்டி விடும் என்று நான் சொல்லக்காரணம், மேற்கு வங்காளம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதுதான்.

    அடுத்த 3 மாதங்களில் நாட்டின் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பாரதீய ஜனதா கட்சி சென்றடையும். கடந்த 4½ ஆண்டுகளில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்வோம். எதிர்க்கட்சிகளின் வெற்று அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PMModi #PrakashJavadekar
    ×